பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.
தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான தேதியை இறுதி செய்யும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொள்கை ரீதியாகவும், துறைகள் ரீதியாகவும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு முன்னதாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.