சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும், விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகவில் பெய்து வரும் மழையில் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்றிரவு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாக இருந்த நிலையில் மதியம் 12 மணிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 18,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 57,000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கன அடியாக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/27/kallanai-mj-2025-07-27-13-06-46.jpg)
எனவே, காவேரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருச்சி முக்கொம்பு மேலனையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் இன்று காலை 11:00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர் இரு கரையை தொட்டு சென்று கொண்டிருப்பதால் கொள்ளிடம் கரையோர பகுதி மக்கள் மிகவும் பாதுகாப்புடன், கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ தடை விதித்திருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்