ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைபடுத்திய விவகாரம் தொடர்பான வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் சிவக்குமார். அவரை சிறைத்துறை டி.ஐ.ஜி தனது வீட்டு வேலைக்காக பயன்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும், வீ்ட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டதாகவும் குறி துன்புறுத்துவதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைதி சிவக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சிறையில் உள்ள சிவக்குமாரை நேரில் சந்தித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு நீதிபதி, தனது அறிக்கையில், கைதி சிவக்குமாரை, சிறைத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கைதிகளை வீட்டு வேலைக்காக சட்ட விரோமாக பயன்படுத்திய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தாக்குதலுக்கு உள்ளான ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை சேலம் சிறைக்கு மாற்றம் செய்து இந்த வழக்கை வரும் செப்டம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளை தனது வீட்டு வேலைக்காக பயன்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“