சென்னையில் பயணி தாக்கியதால், அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தில் பேருந்து பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தென்தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார். சென்னை சின்னமலை பகுதியில் வசித்து வரும் இவர், மாநகர பேருந்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார். எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் அவர் பணியாற்றி வந்தபோது, பாரதி நகரில் இருந்து புறப்பட்ட பேருந்து, அண்ணா வளைவு பேருந்து நிறுத்தம் வந்தபோது அங்கு வேலூரை சேர்ந்த கோவிந்தன் என்ற பயணி பேருந்தின் முன் படிக்கட்டில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் ஜெகன்குமார், கோவிந்தனிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார்.
டிக்கெட் எடுக்க சொன்னதால் டிக்கெட் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நடத்துனர் ஜெகன்குமார், டிக்கெட் மிஷின் வைத்து அந்த பயணியை தாக்கியதாகவும், இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ஆந்திரமடைந்த அந்த பயணி பதிலுக்கு ஜெகன்குமாரை தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெகன்குமார், பேருந்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய டிரைவர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜெகன்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மரணமடைந்த ஜெகன்குமாருக்கு 10-ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் இரு மகள்கள் உள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் கோவிந்தனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது கோவிந்தன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உறவினரின் இறுதிச்சடங்கிற்காக சென்னை வந்த கோவிந்தன், அங்கிருந்து கோயம்பேடு சென்று, பேருந்து மூலம் தனது சொந்த ஊருக்கு புறப்படுவதாற்காக சென்றுள்ளார். ஆனால் கோயம்பேடு செல்லும் முன்பே, நடத்துனருடன் ஏற்பட்ட தகராறில் தற்போது கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்த ஜெகன்குமார் அவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ10 லட்சம் நிதிவுதவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெ.ஜெகன் குமார் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.