சென்னை கிண்டி ரேஸ் க்ளப்பில், மழை நீரை சேகரிக்கும் வகையில் புதிதாக 4 குளங்களை வெட்டும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில, 3 குளங்கள் உள்ள நிலையில், 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில், 4 குளங்கள் அமைப்பதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் க்ளப், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரைப்பந்தையம் விடுவதற்காக 99 ஆண்டுகள் வாடகைக்கு விடப்பட்டது. இவர்களின் ஒப்பந்தம் 2044-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சமீபத்தில், 730 கோடி 86 லட்சம் வாடகை பாக்கியை செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம், ரேஸ் க்ளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் வாடகை பாக்கியை செலுத்த தவறினால், ரேஸ் க்ளப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் க்ளப் நிர்வாகம் மேல்முறையீடு செய்தாலும், வாடகை பாக்கி செலுத்தாத காரணத்தினால், ரேஸ் க்ளப் மைதானத்திற்கு தமிழக அரசின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரேஸ் க்ளப்பில், 4832 கோடி மதிப்பிலாள 118 ஏக்கர் நிலத்தை தோட்டகலை மற்றும் மலைப்பயிர் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த இடத்தில் பிரம்மாண்டமாக ஒரு பசுமை பூங்காவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இந்த ரேஸ் க்ளப்பில், ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில், 3 குளங்கள் உள்ள நிலையில், மேலும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில், புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதற்குள் இந்த பணிகளை முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்சி வருகிறது. இதன் காரணமாக குளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“