மதுவால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. மது அருந்துவதால் உடல்நல பிரச்னை மட்டுமின்றி, மன ரீதியான பாதிப்புகள், கடன் பிரச்னை என ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்னை தொடர்ந்துக்கொண்டே இருக்கும். அவைகளிலிருந்து விடுபட நிச்சயம் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். இன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில் மதுவினை தவிர்க்கவும், தடுக்கவும் அரசுதான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொண்டு மதுவில்லா மாநிலமாக உருவாக்க முயற்சிக்கவேண்டும்.
மது குடிப்பவர்கள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதனால் கல்லீரலில் கொழுப்பின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உருவாகும். ஒரு மாதம் மதுப்பழக்கத்தை நிறுத்தும்போது நேர்மறையான மாற்றங்கள் உருவாக தொடங்கும். மதுவால் உடலில் ஆல்கஹால் அளவு அதிகரிக்கும்போது இதய நோய், கல்லீரல் புற்றுநோய், மார்பகம், பெருங்குடல், உணவுக்குழாய், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் ஏற்படுமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே மதுப்பழக்கத்தை கைவிட்டு ஆரோக்கியமான வாழ்வோடும், மனதோடும் வாழ்வதற்கு பொதுமக்கள் முயற்சிகள் மேற்கொள்வதற்கு அரசாங்கம் முழு முயற்சியினை எடுக்க வேண்டும். மது அருந்துவதால் ஒருவரது உடல் நிலை பாதிக்கப்படும் எனத் தெரிந்தும், அதையே போலீஸ் பாதுகாப்புடன் விற்றுக்கொண்டிருக்கும் அரசுகளை என்னச்சொல்வது என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண், ‘நான் ஓ-.சி.யில்தான் குடிக்கப் போனேன்… என்னிடம் பணம் இல்லை… நான் எப்படி பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டுவது?’ என போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி வலைதளங்ளில் வைரலாகி பேரதிர்ச்சியை எற்படுத்தியிருக்கிறது. மேலும், தமிழகத்தின் பிரதான பெரு நகரங்களில் டாஸ்மாக் கடை அருகிலேயே இருந்து, போலீசார் வாயை ஊத சொல்லி பத்தாயிரம் ரூபாய் அபராதம் போடுவதுதான் ‘குடி’மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்ச்சியிருக்கிறது.
யார் மீது குற்றம்..?
கடந்த 20 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலின் போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அடித்துச் சொன்னார்கள்… ஆனால், முதல்வரானவுடன் அதை செய்தார்களா..? கிடையாது! சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்து வைத்ததுதான் சாதனை! இதுபோதாதென்று 5-க்கும் 10-க்கும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு கொடுக்கமுடியாமல் கொண்டு வந்து டாஸ்மாக் மதுக்கடை பார்களில் கொட்டிச்செல்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.
கடந்த காலங்களில் ‘குடிப்பதற்கு’ பயந்து பயந்து, யாரும் பெரியவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று ஓடி ஓளிந்து மதுவினை குடித்த காலம் மாறி இப்போ பெரிய பெரிய பேனர், கவர்ச்சிகரமான விளம்பரம், பத்தாதற்கு போலீஸ் பாதுகாப்பு என ஒருவரை குடிக்க வைக்க ஆளும் வர்க்கம் என்னன்னெவோ முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டிருப்பது சோதனை காலத்திலும் வேதனை. காசுக்கு தகுந்த இடங்களை உருவாக்கி பிரம்மாண்ட பார்களை ஏற்படுத்தி ஏழையின் மடியை முற்றிலும் சுரண்டிக்கொண்டிருக்கின்றது ஆளும் வர்க்கம்.
இப்படி இருக்க சில்லுவண்டுகள் அதாவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும், குடிக்கவும் பயந்த காலம் போய் இப்போ எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் தைரியமாக பொதுவெளியிலும் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம், குடிமகன்கள் தரப்போ, நாங்களா கேட்டோம், கடையை திறந்து வச்சது நீங்க, போலீஸ் மூலம் டோக்கன் கொடுத்தது நீங்க, குடிக்க வச்சது நீங்க என, அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை அதிகளவில் திறந்து வைத்துவிட்டு, குடித்து விட்டு வருபர்வகளை தெருவில் பிடித்து போலீஸார் பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று குமுறுகிறார்கள் குடிமகன்கள்!
இது பற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம், ‘‘சார், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை அதிகப்படுத்திதான் வருகிறார்கள். இதனை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்! தங்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுக்கடைகளிலேயே கொடுத்து, குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதைவிடக் கொடுமை தினக்கூலிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து குடித்துவிட்டு, அடுத்த அரை கிலோ மீட்டர் கூட தொலைவு இருக்காது, ‘வாயை ஊது?’ என நிற்கிறார்கள் போலீஸார். பலபேர் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்துவிட்டு வந்து விடுகிறார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும். இதே நிலை நீடித்தால் நாட்டின் நிலை என்னவாகும்..?’’ இது ஒரு கட்டத்தில் ஆளும் ஆட்சிக்கும், அதிகார வர்க்கத்திற்கும் எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வழிகளை வகுக்கலாம்.
அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டததாய் தான் அமைந்திருக்கின்றது டாஸ்மாக் கடைக்கு சென்று வருபவனின் நிலைமை. குடிக்காதே எனும் விளம்பரம் படுத்தும்போதே அவன் மட்டையாகி கிடப்பதை வெளியிடுகின்ற அரசாங்கம் குடிக்கு ஒரு முற்று புள்ளி வைத்தால் என்ன? நீங்களே சரக்கும் விப்பீங்களாம், வாங்க வாங்க வந்து குடிங்கன்னு தனியார் மூலமா விளம்பரப்படுத்துவீங்களாம், குடிச்சுட்டு வெளியே வந்தா வாசல்லேயே நின்னு அபராதம் போடுவீங்களாம் என்னய்யா உங்க கணக்கு, ஏன்யா பாமர மக்களப்பாத்து மட்டும் படையெடுத்து வர்றீங்க, ஒன்னு பார் எல்லாத்தையும் மூடுங்க, இல்ல போலீஸார்ட்ட குடிச்சவனப்பாத்து ஊத சொல்லாதீங்க, ஒருத்தன் ஊதியன ஊதுகுழலைத்தான் எல்லாரும் ஊதுரானுவோ, அப்புறம் எதுக்கய்யா உங்களுக்கு விளம்பரம் என்றார் ஆதங்கத்துடன்.
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்திருக்கின்றது. ஒரு பெண் எங்கோ குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறார் இது அவருக்குமட்டுமல்ல சாலையில் பயணிக்கக்கூடிய பலருக்கும் பேராபத்துதான். அந்தப்பெண்ணின் செயலுக்கு யார் குற்றவாளி, மதுவினை விற்றவங்கள சொல்றதா, காசு கொடுத்து வாங்கி குடிச்சுட்டு ரோட்டுல விழுந்தவங்கள சொல்றதா?
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.