சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டதால், வரும் அங்கிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது,
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் சில தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓரளவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளதால், சென்னை - மதுரை தேஜஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் ஆகிய 2 ரயில்கள் இன்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள 11 நடைமேடைகளில் 4 நடைமேடைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக சில ரயில்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்திருப்பதை அடுத்து சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் இன்று, (ஆகஸ்ட் 5) முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது.
அதேபோல, மறுமார்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்