சென்னை கிண்டி ஆளுனர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுனர் மாளிகை பாதுகாப்பு குறைபாட்டில் எந்த குறைபாடும் இல்லை என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள ஆளனர் மாளிகையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்து வரும் ஒரு பகுதியாகும். ஆளுனர் மாளிகை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே இன்று ஆளுனர் மாளிகை முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென ஆளுனர் மாளிக்கை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆளுனர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக அந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம், இருந்து மேலுமத் 3 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கருக்கா வினோத் என்ற ரவுடி என்பது தெரியவந்துள்ளது.
ஆளுனர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுனர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஆளுனர் மாளிகை பாதுகாப்பு குறைபாட்டில் எந்த குறைபாடும் இல்லை என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபரை உடனடியாக அங்கிருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில் தீ விபத்தோ, யாருக்கும் எந்த பாதிப்போ ஏற்படவில்லை. தேனாம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவர் மதுபோதையில் இந்த சம்பவத்தை செய்துள்ளார். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“