திருச்சி பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, அங்கு நடந்த உள்நாட்டு சண்டைக்குப்பிறகு அகதியாக கடந்த 1984-ம் ஆண்டு தமிழகம் வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 65 ஏக்கர் பரப்பில் சீடர்கள் சகிதமாக ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். அதன்பிறகு கடந்த 1994-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் ரூ.76 லட்சத்துக்கு நிரந்தர வைப்பீடு வைத்துள்ளதாகவும், ரூ.15 லட்சம் மதி்ப்பில் அந்நிய கரன்சி நோட்டுகள் வைத்திருந்ததாகவும், ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட ஏனைய முதலீடுகள் குறித்தும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அதையடுத்து அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரி்த்த எழும்பூர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு சஃபேமா எனும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய வழிவகை செய்யும் சட்டத்தின் கீழ் பிரேமானந்தா அறக்கட்டளையின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பி்க்கப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேமானந்தா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா கடந்த 2011-ம் ஆண்டு கடலூர் சிறையில் இறந்தார். அவரது அறக்கட்டளைக்கு எதிராக சஃபேமா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. நோட்டீஸ் சரியான நபர்களுக்கு அனுப்பப்படவில்லை” என்று வாதித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர். அதன்பிறகு ஓராண்டு கழித்து 2007-ம் ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். சஃபேமா சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே நடந்த விசாரணையில் அறக்கட்டளை தரப்பு பங்கெடுத்துள்ள நிலையில், இந்த நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. நோட்டீஸை சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். எனவே இதுதொடர்பான விசாரணையில் முறையாக பங்கெடுக்க வேண்டும், என அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவி்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.