கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைத்து பக்தர்களும் கோயிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம். எந்த சாதியும், கோயில்களுக்கு உரிமை கோர முடியாது. பெரும்பாலான பொதுக்கோயில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. சாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது மத நடைமுறை அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் மாரியம்மன், அங்காளம்மன் மற்றும் பொன் காளியம்மன் கோவில்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், இதில் பொன் காளியம்மன் கோவிலை தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள், மற்ற கோவில்களை வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும், இதில் இருந்து பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்றும், கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பரத சக்ரவர்த்தி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம். சாதி என்பது மத பிரிவு அல்ல. சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள், மத பிரிவு என்ற பெயரில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பிரிவினை மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொது கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமைகோர முடியாது. சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறை அல்ல என்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.