சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணிநிரந்தரம் கோரிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை ஆன்லைனில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், தினக்கூலி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகளுக்கு உதவுவதற்காக தொழிலாளர் நலத்துறை கூட்டுறவு தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், நிதித்துறை முதன்மை செயலாளர் டி.உதயச்சந்திரன், சர்க்கரை ஆலையர் அன்பழகன், விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் விவாசாயிகள் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் ஆன்லைன் மூலமாக வரும் 25-ந் தேதி ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“