/indian-express-tamil/media/media_files/ONxgv750ZvWhcmJ4AKX3.jpg)
முருகன் - நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. நாங்கள் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம்.
இந்த பாஸ்போர்ட்டுக்கான நேர்காணலுக்காக ஜனவரி 30ம் தேதி அழைக்கப்பட்டோம். என்னுடைய நேர்காணல் முடிந்துவிட்டது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், என் கணவர் முருகன், இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.
என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனை எப்போது வேண்டுமானாலும் இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்புடன அழைத்து செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எப்போதும் அழைத்து செல்லலாமா? அல்லது முன்கூட்டியே அனுமதி பெற்று அழைத்துச் செல்ல வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம் என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முருகன் அழைத்துச் செல்லப்படும் நாளில் ஒருவேளை அவரால் நேர்காணலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால் அது பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அனுமதி பெற்ற தகவலை வரும் மார்ச் 12-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.