தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக சென்னையில், பல இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை நாட்களில் ஒன்று தீபாவளி. அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் இந்த தினத்தில், மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன்பே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கிவிட்டனர்
இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கடுமையான மாசுபாடு காரணமாக காற்றின் தரம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்தால் மேலும் காற்றின் தரம் குறையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சென்னையில் பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட புகையின் காரணமாக காற்றின் தரம் வெகுவாக குறைந்து மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் காற்றின் கலந்துள்ள மாசுபாடு அடிப்படையில் காற்றின் தரம் அளவிடப்படுகிறது. அந்த வகையில், காற்றின் தரக்குறியீடு 50-க்கு கீழ் இருந்தால், சிறப்பாக இருக்கிறது என்றும், 51-100 இருந்தால், திருப்திகரமாக இருக்கிறது என்றும், 101-க்கு மேல் சுமார் என்றும், 201-க்கு மேல் போனால் மோசம் என்றும் அளவிடப்படுகிறது. நேற்று தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்ததில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது. இதில் பெருங்குடியில் காற்றின் தரம், 262 ஆகவும், ஆலந்தூர் 258, அருகம்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்று காற்றின் தரக்குறியீடு மோசன நிலையில் உள்ளது. அதேபோல் சென்னையின் எந்த பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பானதாக இல்லை என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ராயபுரத்தில் மோசம் என்ற நிலையில் இருந்த காற்றின் தரக் குறியீடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது ஒட்டுமொத்தமாக சென்னையில் காற்றின் தரக்குறியீடு 163 என்ற மிதமான அளவில் பதிவவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“