/indian-express-tamil/media/media_files/2025/03/27/K4jy1fvf0z5P6JxYyL0O.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 27, 2025 22:24 IST
சென்னையில் இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைப்பு; ம.ஜ.க போராட்டம் ரத்து
சென்னையில் நடைபெறவிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மே 29-ம் தேதி நடைபெறவிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் (ம.ஜ.க) போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலிய திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த இஸ்ரேலிய திரைப்பட விழா ICAF நிறுவனத்தின் மூலம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டதால், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மஜக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
-
May 27, 2025 22:08 IST
ஈ.சி.ஆர் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் திடீர் பழுது; 30 பேர் சிக்கித் தவிப்பு
சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 70 அடி உயர ராட்சத ராட்டினத்தில் 30 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
May 27, 2025 21:50 IST
இ.சி.ஆர்-ல் ராட்சத ராட்டினத்தில் திடீர் பழுது; 30 பேர் சிக்கி்த் தவிப்பு
இ.சி.ஆரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் சிக்கித்தவிக்கின்றனர். சென்னை அருகே ஈ.சி.ஆரில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் திடீர் பழுது ஏற்பட்டு 30 பேர் சிக்கித்தவிக்கின்றனர்.
-
May 27, 2025 21:46 IST
த.வெ.க நிர்வாகியை நலம் விசாரித்த விஜய்
சென்னையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள த.வெ.க நிர்வாகியை தொலைபேசி வாயிலாக த.வெ. தலைவர் விஜய் நலம் விசாரித்தார்.
-
May 27, 2025 20:34 IST
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் விவேக்குமார் சிங், பட்டு தேவானந்த் ஆகியோர் வேறு மாநில ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி விவேக்குமார் சிங்க் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கும், நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது
-
May 27, 2025 20:13 IST
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யண் சௌபே உதயநிதியுடன் ஆலோசனை
தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டினை இளைஞர்களிடம் அதிக அளவில் கொண்டு செல்வது குறித்து, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சௌபே மற்றும் துணைத் தலைவர் என்.எ.ஹரிஸ் ஆகியோருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
May 27, 2025 20:11 IST
மீண்டும் ஒரு வாய்ப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மே 30-ம் தேதி மீண்டும் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அல்லது ஏதேனும் காரணங்களால் விண்ணப்பத்தில் பிழை ஏற்பட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-
May 27, 2025 19:49 IST
சென்னையில் அப்துல் ஜாஃபர் இடங்களில் சோதனை - நாக்பூர் இ.டி அதிகாரிகள் அதிரடி
செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடைய அப்துல் ஜாஃபருக்கு சொந்தமான இடங்களில் நாக்பூரைச் சேர்ந்த இ.டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 4 ஆண்டுகளாக அப்துல் ஜாஃபருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையில் நிலம் தொடர்பான சொத்துகள், சொகுசு வாகனங்கள் கடத்தலின் மூலம் வந்த வருமானத்தில் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
-
May 27, 2025 19:12 IST
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
17 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்துவிடும். அது பிளே ஆப் சுற்றில் அந்த அணிக்கு கூடுதல் நன்மையாக அமையும். எனவே அதற்கான பெங்களூரு அணி முழு மூச்சுடன் போராடும். மறுபுறம் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
-
May 27, 2025 19:03 IST
ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி விவேக்குமார் சிங்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி பட்டுதேவானந்தை ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது
-
May 27, 2025 18:48 IST
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகை ஷோபனா
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முா்மு நடிகை ஷோபனாவுக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி பூத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.
-
May 27, 2025 18:23 IST
விசாரணை கைதி உயிரிழப்பு : போலீசாருக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
சேலம் காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதில் விசாரணை கைதி கோகுல கண்ணன் உயிரிழந்த விவகாரத்தில், 7 காவல்துறையினருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
May 27, 2025 18:00 IST
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல கர்நாடகா, மராட்டியத்தில் வெளுத்தும் வாங்கும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
-
May 27, 2025 17:38 IST
சென்னையில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து
சென்னை கொருக்குப்பேட்டையில் ராஜம் டிரேடர்ஸ் என்ற பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் அட்டை, பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
May 27, 2025 17:36 IST
வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
May 27, 2025 17:35 IST
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும், இதற்கு ஆதரவாக மற்ற பெட்ரோல் முனையத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
May 27, 2025 17:28 IST
கொளத்தூர் மாணவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கொளத்தூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி, உபகரணங்கள் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
-
May 27, 2025 17:01 IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 : ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.
-
May 27, 2025 16:34 IST
ராஜ்யசபா எம்.பி. சீட்: பிரேமலதா விளக்கம்
தற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம். ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
-
May 27, 2025 16:13 IST
தமிழகத்தில் புதிய கொரோனா இல்லை
தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை. 10-15 பேருக்கு கொரோனா பரவல் தினமும் ஏற்படுகிறது
- பொது சுகாதாரத்துறை விளக்கம்
-
May 27, 2025 15:56 IST
இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேட்டி
காரைக்காலில் 470 படுக்கை வசதிகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். ஜிம்பர் மருத்துவமனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன
-புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேட்டி
-
May 27, 2025 15:27 IST
மின்சாரம் தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு
சென்னை, பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பூமிக்கு அடியில் சென்ற உயரழுத்த மின் கம்பி, கடப்பாரையில் பட்டதால் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 27, 2025 14:14 IST
டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில், 104 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
-
May 27, 2025 13:55 IST
அராஜக செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய்
அராஜக செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நிவாரண உதவி வழங்க சென்ற த.வெ.க பெண் நிர்வாகிகளை போலீசார் கடுமையாக தாக்கியதாக தெரிவித்துள்ள அவர், மகளிருக்கு எதிரான அராஜக போக்கை தொடர்ந்தால், சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
May 27, 2025 13:19 IST
இபிஎஸ்க்கு பதில் சொல்ல விரும்பவில்லை - முதல்வர்
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை; அரசை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் ஏதோ ஒரு குற்றச்சாட்டை இபிஎஸ் வைக்கிறார். டெல்லி பயண விவகாரத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்; டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
May 27, 2025 13:16 IST
காதலை பிரித்ததால் 17 வயது சிறுமி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதலை பிரித்ததால் 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல்லை சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வயப்பட்ட 17 வயது சிறுமி, ஏப்.8ல் வீட்டை விட்டு வெளியேறினார். 18 வயது பூர்த்தி அடையாத நிலையில், பெற்றோருடன் செல்ல மறுத்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 22ஆம் தேதி சிறுமியை சமாதானம் செய்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
May 27, 2025 13:09 IST
"ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம் இணைந்து புதிய படிப்பு” - மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்
“புதுச்சேரி ஜிப்மரில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதத்தை இணைத்து புதிய படிப்பு தொடங்கப்படும் காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கட்ட விரைவில் அனுமதி என்று ஜிப்மரில் அவசரகால பிரிவை திறந்து வைத்தபின் மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பேட்டியளித்துள்ளார்.
-
May 27, 2025 12:50 IST
5ம் தலைமுறை போர் விமானம் - முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் 5ம் தலைமுறை போர் விமானம், அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்படும். ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சியுடன், தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல். இதன் வெற்றி 'தன்னிறைவு இந்தியா' திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு அறிவித்துள்ளார்.
-
May 27, 2025 12:49 IST
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈ.பி.எஸ் கேள்வி
அரக்கோணத்தில் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த புகாரில் திமுக கவுன்சிலர் பாபு உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம். "திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது? என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
May 27, 2025 12:27 IST
முதல்வருக்கு வேஷம் போட வேண்டிய அவசியமில்லை: அப்பாவு
தமிழக முதல்வர் ஒற்றை, இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமில்லை வேடங்கள் போடுவது நடிகர்கள் வேலை; முதல்வரின் வேலை கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
May 27, 2025 12:26 IST
மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார்
கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார் 150 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார் ஓதுவார் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளி பிரியவதனாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்
-
May 27, 2025 12:03 IST
அமிர்தசரஸ் மஜிதா சாலையில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மஜிதா சாலையில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
May 27, 2025 11:51 IST
செல்போன் கொள்ளை - ஐ.டி. ஊழியர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் ஐ.டி. ஊழியரின் செல்போனை கொள்ளையர்கள் பறித்துள்ளனர். அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் தலை மற்றும் முதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
May 27, 2025 11:32 IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வினுக்கு வெண்கலம்
ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலப் பதக்கம் வென்றார். தென்கொரியாவில் குமி நகரில் இன்று தொடங்கிய 26வது ஆசிய தடகள போட்டி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தடகள போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 64 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் தொடங்கியது. இதில் 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் பதக்கம் வென்றார்.
அதைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரவீன் சித்ரவேல், 4×100 ரிலே போட்டியில் தமிழரசு, ராகுல் குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த ரிலே போட்டியுடன் சேர்த்து கலப்பு ரிலே போட்டியில் விஷால், சந்தோஷ் குமார் ஆகியோர் களம் காண்கின்றனர். 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் பிரிவில் வித்யா ராம் ராஜ் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
May 27, 2025 11:25 IST
மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும் - இ.பி.எஸ்
தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி. அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது- திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது-
திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது. போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு திரு.
மு.க ஸ்டாலினுக்க கோபம் வருகிறது? இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின்?ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது! திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை. நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
May 27, 2025 11:25 IST
முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய அமைச்சர்
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), அவசர மருத்துவ நிவாரணம் (EMR) பிரிவு, பேரிடர் மேலாண்மை பிரிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிபுணர்களின் மறுஆய்வுக் கூட்டம் உள்ளிட்டவைகளுடன் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) தலைமையில் ஆலோசனை நடந்தது.
இதில் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையுடனும் உள்ளது. தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
-
May 27, 2025 10:55 IST
போலீசார் அத்துமீறல்? குழந்தை பலி
கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து போலீஸ் இழுத்த நிலையில், பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து இறந்துள்ளது. தற்போது குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
May 27, 2025 10:41 IST
சாலை விபத்தில் 6 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் பீட்ஸ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்துக்குள்ளானதை அடுத்து காரில் இருந்த 6 பேரும் கீழே இறங்கினர். சாலை தடுப்பில் ஏறி நின்ற காரை அகற்றும் பணியின்போது 6 பேர் மீதும் அவ்வழியே வேகமாக வந்த லாரி மோதியதில் 6 பேரும் உயிரிழந்தனர்.
-
May 27, 2025 10:29 IST
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
May 27, 2025 10:28 IST
மும்பையில் புதிதாக திறந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் கொட்டிய மழைநீர்
மும்பையில் கடந்த 10-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய மெட்ரோ ரயில் நிலையத்தில் மழைநீர் கொட்டியதால், பயணிகள் அவதியுற்று வருகிறார்கள். சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக மும்பை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
May 27, 2025 09:59 IST
மேற்கு வங்கக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில்
வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தினால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. -
May 27, 2025 09:34 IST
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்க பயணம்
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். மே 29-ந் தேதி வரை அமெரிக்காவில் இருக்கும் அவர், அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்திக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற நிலையில், தற்போது விக்ரம் மிஸ்ரி அமெரிக்க பயணம் செல்கிறார்.
-
May 27, 2025 09:07 IST
நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளன.
-
May 27, 2025 08:50 IST
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி பிரச்சினை, வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என தெஹ்ரானில் ஈரான் அதிபர் உடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றியுள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என இந்தியா கூறி வருகிறது
-
May 27, 2025 08:46 IST
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால்,ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள
நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. -
May 27, 2025 07:59 IST
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 27, 2025 07:23 IST
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,
-
May 27, 2025 07:21 IST
பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண்ணின் தந்தையே தனது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக கூறியுள்ளார் என்று டெல்லி காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் அடிப்படையில், டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.
-
May 27, 2025 07:19 IST
பல் மருத்துவருக்கு தண்டனை
உத்தரபிரதேச மாநிலத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சையில் அடுத்தடுத்து 2 பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த பல் மருத்து சரணடைந்த நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.