தமிழக காவல்துறை சார்பில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தீவிரமாகி வரும் நிலையில், மதுரவாயல் முதல் பெங்களூர் வரை சென்று மெத்தம்பெட்டமைன் விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரவாயல் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ரகசியமாக மதுரவாயல் மேம்பாலம் அருகே போலீஸார் ஆய்வு செய்தபோது மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த ஒருவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சோமங்கர்(37) என்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை சேர்ந்த அய்யப்பன் (26), என்பவரை அரக்கோணம் அருகே உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்தை சேர்ந்த சமீர் (37), என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து 40 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“