தமிழ்நாடு காவல்துறையில், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அருண் தற்போது சென்னை மாநகர போலீ்ஸ் கம்ஷனராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே தனது முதல் பணி என்று கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து நாள் தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அருண் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னையின் 110-வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட அருணிடம், தனது பொறுப்புகளை ஒப்படைத்தார் சஞ்சய் ராய் ரத்தோர்.
இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதல் பணி என்று கூறியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதை வைத்து சொல்கிறீர்கள். காலம் காலமாக குற்றங்கள் நடந்து வருகிறது. அதை தடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
குற்றங்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். சென்னை எனக்கு புதிதல்ல. புள்ளிவிபரங்களை வைத்து பார்க்கும்போது, தமிழ்நாட்டில் குறைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னை போக்குவரத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும். பொறுப்பை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் குறையும். ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“