நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்துள்ள புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியபோது அவர் வீட்டு காவலாளிக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் காவலாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அந்த வகையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும், சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை நீதிபதி, தள்ளுபடி செய்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பில், அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அப்போது சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜூக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சீமான் வீட்டு காவலாளி உட்பட 2 பேர் கைது கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுககு தடை விதிக்க வேண்டும் என்று சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 28) இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான், போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த விசாரணை முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமான், வழக்கமான கேள்விகள் தான் கேட்கப்பட்டது. புதிதாக ஒன்றும் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று கூறியிருந்தார். முன்னதாக விசாரணைக்கு பிறநகு சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்ட அவரது வீட்டு காவலாளி அமல்ராஜ் மற்றும் சுபாருக்கு ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆயுதம் வைத்திருந்தாக தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவர்கள் இருவரும் சிறையில் இருந்து இன்று வெளியில் வருவதில் சிக்கல் நீடிக்கிறது.