சென்னை புறநகர் ரயில் சேவைகள் நாளை (மார்ச் 09) ரத்து செய்யப்பட் நிலையில், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் மக்கள், தங்கள் பயணம் செய்ய முக்கியமாக பயன்படுத்துவது, புறநகர் ரயில்கள். சென்னை போன்ற நகரங்களில், இந்த ரயில் சேவையை நம்பி பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம். வார நாட்களில் வேலைக்கு செல்வோரால், புறநகர் ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் வெளியில் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சில சமயங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (மார்ச் 9-ம் தேதி) (ஞாயிற்றுக் கிழமை) சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ திருமால்பூர்/ அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் நலன் கருதி, சென்னை கொடம்பாக்கத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிளாம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதில் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.