அடுத்த 2 நாட்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேனி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்பு பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னேற்றபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் சென்ற மீனர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, படக்குகள் அடித்துச்செல்லும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள மீனவர்கள் பகுதிகளில், படக்குகளை லாரியின் மூலம் ஏற்றிக்கொண்டு பாதுகாப்பான பகுதிக்கு எடுத்து செல்கின்னர்.
அதேபோல் கனமழை காரணமாக கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை தவிர்க்க, கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த நிலையில், அபராதம் விதித்தாலும் பரவாயில்லை. கார்களை எடுக்க முடியாது என்று உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். கனமழையின் காரணமாக காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை திருவல்லிக்கேனி காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காவல்நிலைய கட்டிடம் பழமையானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையம் மூடப்பட்டு, தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் திருவல்லிக்கேனி காவல் நிலையம் தற்காலிகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேனாம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் தண்ணீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“