New Update
/indian-express-tamil/media/media_files/mmQfLVx8TaLx9IKNSFmn.jpg)
சென்னை பெருநகரத்தின் முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, தாம்பரம் மாநகர காவல் துறை ஒரு புதிய மற்றும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வெளியில் செல்ல விரும்புவர்கள் இந்த போக்குவரத்து நெரிசலை கண்டு அஞ்சுகிறார்கள். இதனை தடுக்க காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை பெருநகரத்தின் முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, தாம்பரம் மாநகர காவல் துறை ஒரு புதிய மற்றும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இனி சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜி.எஸ்.டி. சாலை (தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகள்) பம்மல் - குன்றத்தூர் சாலை, திருநீர்மலை சாலை, 200 அடி ரேடியல் சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை, காந்தி முடிச்சூர் சாலை ஆகிய பகுதிகளில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, போக்குவரத்து துணை ஆணையர் திரு. சாமே சிங் மீனா அவர்களின் உத்தரவின் பேரில் சோதனை அடிப்படையில் சனிக்கிழமை அன்று அமலுக்கு வருகிறது.
இந்த நடவடிக்கையின் பலன் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், இந்தத் தடை நிரந்தராமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால், மாற்று வழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குன்றத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள், அனகாபுத்தூர் புறவழிச்சாலை மற்றும் எரிகரை சாலை சந்திப்பு வழியாக மதுரவாயல் புறவழிச்சாலை நோக்கித் திருப்பி விடப்படும்.ஒரகடம், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள்: முடிச்சூர் சாலை - வெளிவட்ட சாலை சந்திப்பில் இருந்து வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் (வழக்கம்), சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும்.
செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் (தாம்பரம் வழி), தாம்பரம் மேம்பாலத்தின் தெற்கு பகுதி, பழைய சோதனைச்சாவடி மற்றும் ஜி.எஸ்.டி சாலை வழியாக வேளச்சேரி நோக்கித் திருப்பி விடப்படும். மதுரவாயலில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள், மதுரவாயல் புறவழிச்சாலை, இரும்புலியூர் சந்திப்பு வழியாகப் பெருங்களத்தூர் நோக்கித் திருப்பி விடப்படும்.
இந்த மாற்றங்கள், சாதாரண நேரத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறையை வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றி, போக்குவரத்து சீராக அமைய ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.