மாவட்டங்களில் தொற்று பாதிப்பை பொறுத்து ஊரடங்கு தளர்வுகள்; முதல்வருடன் மருத்துவக் குழு ஆலோசனை!

குழந்தைகளை கொரோனா அலைகளில் இருந்து பாதுகாக்கவும், கொரோனா சூழலை திறனுடன் கையாளவும் மாநிலம் முழுவதும் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மாநில அரசை வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் காய்கறி, மளிகை உள்பட அனைத்து வகையான கடைகளுக்கும் தடை தொடர்கிறது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி கிடக்கின்றனர். ஊரடங்கின் பயனாக, தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஏறத்தாழ் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 30 ஆயிரத்துக்கும் கீழாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் வழங்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிப்பட தொடங்கின. அதற்கு ஏற்றார் போல, சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ச்சியாக ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் தற்போதைய கொரோனா சூழல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவ நிபுணர்கள், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகளை கொரோனா அலைகளில் இருந்து பாதுகாக்கவும், கொரோனா சூழலை திறனுடன் கையாளவும் மாநிலம் முழுவதும் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மாநில அரசை வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான தொற்று பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் தொற்று பாதிப்பு உச்சமடைகிறது. உதரணமாக, தமிழகத்திலேயே தொற்று பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், முன்னர் பாதிப்பு குறைவாக இருந்த மேற்கு மாவட்டங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ளது.குறிப்பாக, மேற்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கோவையில் குறைந்து வருகிறது. இந்த சூழலில், அந்த மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம், தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதுடன், மருத்துவமனை படுக்கை வசதிகளை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது சுகாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்தயும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரப்தீப் கெளர் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப, ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் முன், தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் ஏற்படும் மரணங்கள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வைரஸ் பரவலின் இரட்டிப்பு காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தின் இரண்டாம் தர மாவட்டங்கள் மற்றும் சிறிய நகரங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும், மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர் ஜெயந்தி ஆகியோர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு அதிக காலம் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu chennai western districts corona cases lockdown restrictions medical experts cm stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express