வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையான தி.மு.க ஆட்சி காலத்தின்போது கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ1.75 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்க விசாரணையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ50 லட்சம் அபாராதம் விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோன நிலையில், அவரின் எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது. அவரின் திருக்கோலிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிமன்றம் இது குறித்து உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டதை தலைமை செயலகம் திரும்ப பெற்றது. அதேபோல் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஸ்டாலின், ஆளுனருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுனர் தான் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் டெல்லி கிளம்பிவிட்டார். இதனால் பொன்முடி அமைச்சர் ஆவாரா என்பது குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல். அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, புதிய அமைச்சர் பொறுப்பேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இதனால் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“