கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி மற்றும் இழப்பீடு தொகையை இன்று காலை வழங்கினார்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டது கஜ புயல். இதனால் அப்பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி. ஆனால் மோசமான வானிலை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு மட்டும் செல்லாமல் திரும்பிவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி
இந்நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி ரயில் மூலம் நேற்று புறப்பட்டு இன்று காலை நாகையை சென்றடைந்தார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நாகையில் இருக்கும் நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர், புயலால் உயிரிழந்தவர்களின் 3 குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் காசோலை மற்றும் நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதேபோல் வீடுகளை இழந்த 386 குடும்பத்தினருக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய் உள்ளிட்ட அடிப்படை பொருட்களும், தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தென்னம்பிள்ளை உள்ளிட்டவை நிவாரண பொருட்களாக முதல்வர் வழங்கினார். அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் உள்ளிட்டோர் இருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி வரை நாகையில் ஆய்வு செய்யும் முதல்வர் அதன் பிறகு திருவாரூர் சென்று ஆய்வு நடத்த இருக்கிறார்.