தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. கடந்த மாதத்தில் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் அதிகமாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தநிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது?
வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, இன்று (டிசம்பர் 6) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பதாகவும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, புயலின் தீவிரம், மழை பெய்யும் அளவு, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil