தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் நேற்று மாலை கோவையில் இருந்து செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் என்.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகம் முழுவதும் சாலைகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் கார் விழுந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து, அதனை சுற்றி சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.