சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து அடுத்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து மற்றும் மக்கள் பயணடையும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இங்கிருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திக் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்த பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அடுத்து எங்கெல்லாம் பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்குவது கடினம். அதை மனதில் வைத்துக்கொண்டு, படிப்படியாக இதை செயல்முறையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆம்னி பேருந்துகள், தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்ரேஷன் பேருந்துகள், ஆகியவை இங்கிருந்து படிப்படியாக இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கிருந்து சென்னை நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு பயணம் செய்ய, மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தேவைக்கேற்ப இப்போது இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 4000 முறை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“