கன்னியாகுமரி கடலில் 300 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் தூண்டில் வளைவை 500 மீட்டராக அமைத்து தர கோரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக 350 விசைபடகுகளும் கரை ஒதுக்கப்பட்டு உள்ளதால் துறைமுகம் வெறிசோடி உள்ளது.
தமிழகத்திலேயே அதிக சீற்றம் கொண்ட கடல் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடல். எனவே கடற்கரையையும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும், கடற்கரை கிராமங்களையும் பாதுகாக்க தூண்டில் வளைவு தான் பயன்படும். மீனவர்களின் கோரிக்கை படி 500 மீட்டர் நீளத்தில் கன்னியாகுமரி கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் 300 மீட்டர் நீளத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால்மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
300 மீட்டர் தூரம் அமைக்கப்படும் தூண்டில் வளைவால் எந்த பாதுகாப்பு பயனுமில்லை. எனவே 500 மீட்டராக நீட்டி கட்டி தர வேண்டும் என கோரி பெரிய நாயகி பகுதி நாட்டு படகு மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள 350 விசைபடகுகளும் கரை ஒதுக்கப்பட்டு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.