Tamilnadu CM Palaniswami and Kerala CM Pinarayi Vijayan press meet: தமிழகம் - கேரளா மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
தமிழகம் - கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். பேச்சுவார்த்தை நடைபெற்ற தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதே போல, பினராயி விஜயனுடன் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக - கேரளா இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பதால் இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் ஊடகங்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் “தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர். இரு மாநில பிரச்னைகளைத் தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த குழு ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும்.
முல்லை பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறுகயில், “15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடும் கேரளமும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. ஏற்கெனவே பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் எப்படி நீர் பங்கீடு செய்துகொள்வது என்பதற்காக இரண்டு மாநிலத்திலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதே போல, பாண்டியாறு புன்னம்புழா அந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு அதில் உள்ள பிரச்னைகள் ஆய்வு செய்து அவை நிறைவேற்றப்படும். யானைமலை ஆறு, நீராறு நல்லாறு திட்டம், சிறுவாணி ஆறு பிரச்னைகள் என எந்த பிரச்னைகளும் இந்த கமிட்டி மூலம் ஆய்வு செய்து பேசி உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் இருக்கிற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அதையும் திர்ப்பதற்கு உரிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும். தமிழ்நாடு விவசாயிகள் பொதுமக்கள் கேரளாவின் விவசாயிகள் பொதுமக்கள், அனைவரும் சகோதரர்களாக இருக்கின்றனர். இரு மாநிலத்திற்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் நீர் பங்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு மாநில விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான நீரை முறைப்படி பங்கிட்டுக்கொள்வதற்கான ஆலோசனைக்கூட்டம்தான் முறைப்படி நடைபெற்றிருக்கிறது. எனவே இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். எவ்வித பாகுபாடும் இன்றி கேரளமக்களும் தமிழக மக்களும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. இன்னும் உள்ள பல்வேறு சிறுசிறு பிரச்னைகள் எல்லாம் அவை பேசி தீர்க்கப்படும் என்று இந்த கூட்டத்திலேயே முடிசெய்யப்பட்டிருக்கிறது. அந்த பிரச்னைகள் எல்லாம் அந்த கமிட்டியின் மூலமாக பேசி தீர்க்கப்படும் ஆகவே. முதல் கட்டமாக இந்த பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறோம்.
கமிட்டி பாண்டியாறு, செண்பகவல்லி, அய்யாறு ஆகியவற்றில் சிறுசிறு பிரச்னைகள் உள்ளன அவையும் கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். ண்டுக்கு இருமுறை தலைமைச் செயலாளர்கள் சந்தித்து பேசுவார்கள். இது ஒரு அற்புதமான துவக்கம்” என்று கூறினார்.