தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன் முறையாக தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு காலை மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தை கருணாநிதி, அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாள் விழாவின் ஒருபகுதியாக, ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் பாகம் 1 சுயசரிதை நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், மற்றும் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்.@mkstalin pic.twitter.com/6VaY3uxMLU
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 1, 2022
இந்நிலையில் இன்று ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயில் விஜயன் ட்வீட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் பிரதமரிடம் முதல்வர் உறுதியளித்தார்.
பெரியார்- அண்ணா - கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி - அண்ணன் @mkstalin அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். pic.twitter.com/JM7lWpVgof
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 1, 2022
அதேபோல், திமுக எம்.பி.கனிமொழி தனது அண்ணனுக்காக சிறப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்து ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் வாழ்த்து
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. pic.twitter.com/JGt9KWwdrt
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2022
விசிக தலைவர் தொல் திருமாவளவன் வாழ்த்து!
#மார்ச்_01 பிறந்தநள் காணும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
சமூகநீதியைப் பாதுகாத்திட தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக உற்றத் துணையாய் களத்தில் நிற்கும்.#HBDMKStalin69 pic.twitter.com/9EKFVB0bGW— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 28, 2022
குஷ்பு வாழ்த்து
Wishing our H'ble CM of TN Shri @mkstalin avl a very happy birthday. May you live a long healthy and a happy life. பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்அமைச்சர் அவர்கள். 🙏🙏🙏💐💐💐
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) March 1, 2022
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 1, 2022
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. ரஜினி வாழ்த்து!
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2022
திராவிட கழக தலைவர் கி.வீரமணி தனது ட்வீட்டரில் கூறிய வாழ்த்தில்”
நமக்காகவே நாளும் உழைக்கும் - நமது முதலமைச்சர் தளபதி வாழிய வாழியவே!
‘சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (1.3.2022) 69 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
இந்த 69 என்பது தனித்தன்மையானது;
இந்தியாவிலேயே வேறு எங்குமில்லாத சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு 69 விழுக்காடு 9 ஆம் அட்டவணை பாதுகாப்புடன் இருந்து - சுமார் 25, 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, உத்தியோகம் (அரசுத் துறையில்) பயன் தருவது எப்படித் தனிச் சிறப்போ அதுபோல 69 வயதில் அடியெடுத்து வைக்கும் 50 ஆண்டு - அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பொதுவாழ்க்கை, திராவிடப் பேரியக்கத்தின் லட்சிய முழக்கங்களான சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமைகளையே முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கும் ‘வாராது வந்த மாமணி’ போன்றவர் நமது இன்றைய விழா நாயகர்.
13 வயதிலிருந்தே திராவிடர் இயக்கத்தின் கொள்கை, போராட்டங்கள், சிறைவாசம் பிறகு பல்வேறு (பதவி) பொறுப்புகள் எல்லாவற்றிலும் கனிந்த அனுபவக் கொள்கலன் அவர்.
ஆளுமையின் உச்சமும் - மின்னல் வேகச் சாதனைகள் –
அதேநேரத்தில், அடக்கத்தின் ஆழமும், அனைவரையும் அரவணைக்கும் மனிதநேய மாண்பும், கருணை உள்ளமும், உடனடி செயல்திறனும் அவரது தனிப்பெரும் பண்பு நலன்கள்!
அதனால்தான், இந்த 9 மாதங்களில் அவர் இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்று அங்கீகரிக்கப்பட்டு, ஆங்கில ஊடகங்கள்கூட ‘ஸ்டாலின் சகாப்தம் நீடித்து நிலைக்கட்டும்‘ என்று தலையங்கம் எழுதும் அளவுக்கு அவரது தொண்டின் சிறப்பு அகிலம் போற்றுவதாக அமைந்துள்ளது!
இந்தியா முழுவதிலும் சமூகநீதிக்கான களமாக ஆக்கிட அவர் எடுத்த முயற்சிகள் வெல்லட்டும்! ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய் என்றும் திகழட்டும்!!
திராவிடர் பாரம்பரியம் எனது என்றும், பெரியார் ஆட்சிதான் தனது ஆட்சி என்றும், என்றென்றும் அறிஞர் அண்ணாவும், கலைஞரும்தான் தனது வழிகாட்டி - ஆசான்கள் எனவும் பிரகடனப்படுத்தத் தயங்காத திராவிடத்துத் தீரர் அவர்!
நேற்று (28.2.2022) அவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் அனைத்திந்திய தலைவர்கள் - முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். அவரது தனி வரலாற்று நூலின் முதல் தொகுதியின் தலைப்பு ‘’உங்களில் ஒருவன்’’ என்பதற்கு அவர் தந்த விளக்கம் அருமையானது.
‘என்றும் நான் உங்களில் ஒருவன்’
‘எந்த நிலையிலும் நான் உங்களில் ஒருவன்’
‘உங்களுக்காக உழைக்க உறுதி பூண்டவன்’ என்றார்.
அவரது செயற்கரிய சாதனைகளே அதற்கு சான்றும் பகருகின்றன!
அவர் சொல்லுகிறார்:
‘‘நான் உங்களில் ஒருவன் என்று’’
நாம் பாசத்தோடும், பெருமிதத்தோடும் வாழ்த்துவோம் - அவர் நம்மில் ஒருவர்!
நமக்காகவே உழைப்பவர் - நம்மை உயர்த்த நாளும் உழைப்பவர்!
அவர் வாழ்க! வாழ்க பல்லாண்டு என்று மனங்குளிர வாழ்த்துகிறோம்!
இப்படி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் சோஷியல் மீடியா மூலம் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.