சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டத்தையும் அரசு உருவாக்க உள்ளது.

உலகிலேயே சாலை விபத்துகளில், அதிகம் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், பலர் உயிரிழக்க நேர்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இன்னுயிர் காப்போம் திட்டம் எனும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இது மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கும். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன்பின் வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டத்தையும் அரசு உருவாக்க உள்ளது. இது அவசரகால அணுகுமுறை, உயிர் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதல், சேதக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை என 5 செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.

மேலும் சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை அரசு ஈடுபடுத்தும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு மற்றும்  சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை, சாலைகளின் வடிவமைப்பு, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஏற்கெனவே விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கு அனைத்து மருத்துவமனைகளும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm mk stalin announced free treatment for road accident victims for first 48 hours

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com