தமிழகத்தில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, மகளிர் உதவித்தொகை திட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை குறித்து நீண்ட விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், இந்த நூற்றாண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: தோவாளை கவிமணி மண்டபம் எப்போது தொடங்கப்படும்? தளவாய் சுந்தரம் கேள்விக்கு அமைச்சர் பதில்
ஆதிக்க வர்க்கத்தால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டார்கள். சமூகத்தில் ஒரு ஆணுடைய வெற்றிக்கு பின்னாலும் பெண் இருப்பார். ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, உடல் நலம் மற்றும் சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள்? அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம் தான் இது. உலகளாவிய அடிப்படை வருமானம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகள் கல்வி மேம்பாடும் என்றும் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருப்பதை மறக்க முடியாது என பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
மகளிர் உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்கும் பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரிந்திருக்கிறது.
* மீனவப் பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்.
* கட்டுமானப் பணியிலுள்ள மகளிர், சிறு கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் மக்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
* ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணி செய்யும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
* ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.