ஃபீஞ்சல் புயலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஃபீஞ்சல் புயலாக உருவெடுத்தால், தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்பும், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால், ஆறு, ஏரிகள், குளம் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் ஃபீஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஃபீங்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், ஒரே நாளில் முழுப் பருவத்தின் சராசரி (50 செ.மீ.க்கும் அதிகமான) மழை பெய்ததால், பரவலான வெள்ளம், உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.
38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன். மாநில அரசு தற்காலிக சீரமைப்பு முயற்சிகளுக்கு ரூ.2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த பேரழிவின் அளவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது.
அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும். மேலும், சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் மதிப்பீட்டுகளின் அடிப்படையில், மேலும் நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“