Advertisment

டெல்லியில் மோடியுடன் ஸ்டாலின் சந்திப்பு; முன்வைக்கப்பட்ட 3 முக்கிய கோரிக்கைகள் என்ன?

மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமர் கையில் தான் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
stalin modi delhi

பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

Advertisment

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 14 ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்” எனத் தெரிவித்தார். 

அதன்படி, நேற்று (செப்டம்பர் 26) இரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி சென்றார். இரவு டெல்லியில் தங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று (செப்டம்பர் 27) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 45 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். 

இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி, பள்ளிக்கல்வித்துறைக்கான சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், ”பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமர் கையில் தான் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய 3 கோரிக்கைகளை அவரிடம் கொடுத்துள்ளோம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியதைப் போலவே, இரண்டாம் கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. ஒன்றிய நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார். ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை அதே ஆண்டில் வழங்கியது. இந்தப் பணிகளுக்கு இதுவரை ரூ.18,524 கோடி செலவிடப்பட்டிருந்தாலும், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததால் ஒன்றிய அரசின் நிதி மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த தாமதமின்றி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறேன். 

ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியையும், தமிழ்நாடு அரசு 40 சதவிகித நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி. இந்தத் தொகையில் முதல் தவணை இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்குக் கரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூற்றுகளைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே செயல்படுத்தியிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை விட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். இருப்பினும், அதில் கையெழுத்திடாததால் ஒன்றிய அரசு நிதி விடுவிக்காததால் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழலைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிக்க வலியுறுத்தியிருக்கிறோம்.

மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வரும் வாழ்வாதார பிரச்னைகளை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை கடற்படையின் கைது உள்ளிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் பலமுறை வலியுறுத்தியும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இந்த 7 ஆண்டுகளில் அதிகளவில் இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. 191 மீன்பிடி படகுகளும், 145 மீனவர்களும் இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருக்கிறேன். அடுத்த மாதம் கொழும்புவில் நடைபெறவிருக்கும் இந்தியா - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்துத் தீர்வு காண வலியுறுத்தியிருக்கிறேன். இலங்கை புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு முன்வைக்க வலியுறுத்தியிருக்கிறேன். இந்த மூன்று முக்கிய கோரிக்கைகள் பற்றிக் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகப் பிரதமர் உறுதியளித்திருக்கிறார்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 5.15 மணியளவில் விமானம் மூலம், சென்னை திரும்புகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Mk Stalin Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment