தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து, மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று வருகிறார். அந்த வகையில், கோரிக்கை மணுவோடு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஸ்டாலின் அளித்த உறுதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் திமுக கடுமையாக எதிர்த்து வந்த பேனர் கலாச்சாரத்தை, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் முதல் நாமும் அதை செய்யக் கூடாது என, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தி இருந்தார். இதனால், ஸ்டாலினின் சாலை பயணங்கள் மிகவும் எளிமையான வகையில், குறைந்த அளவிலான பாதுகாப்பு அம்சங்களோடு இருந்து வருகிறது. போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் குறைந்த அளவிலான கான்வாய் வாகனங்களுடன் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவது பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் குறைவான அளவில் இருப்பதால், முதலமைச்சர் ஸ்டாலினை எளிதில் மக்கள் அணுகி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியில் கான்வாய் வாகனங்களின் பாதுகாப்போடு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது சாலை ஓரம் காத்திருந்த பெண் ஒருவர், அவரின் காரினை பார்த்ததும், கைகளில் வைத்திருந்த கோரிக்கை மணுவோடு கார் அருகில் சென்றுள்ளார். அந்த பெண்ணை கண்டதும் டிரைவரிடம் காரினை நிறுத்த சொன்ன முதல்வர் ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்துள்ளார். பின், அவரது கோரிக்கை மனுவை வாங்கி படித்து பார்த்தப் பின், அதில் கையொப்பமிட்டு தனது உதவியாளரிடம் அளித்துள்ளார் ஸ்டாலின். மேலும், மனு மீது உடனடியான நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல், உங்கள் மனு மீது இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி கோரிக்கை மணுவோடு காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை எளிமையாக சந்தித்ததும், சந்திப்பின் போது எந்த காவலர்களும் அந்த பெண்ணை தடுக்காமல் இருந்த அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil