வங்கக்கடலிலல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் மழையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களுக்கு நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழ்நாடு- இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்தம் தீவிரமடைந்து வருவதால், நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை,கடலூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழை பாதிப்பு தொடர்பான மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “மழை வருகிறதோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய குழுவை நியமித்துள்ளோம் என்று கூறியுள்ளார். பா.ம.க நிறுவனர் அறிக்கை குறித்து கேட்டபோது, அவருக்கு வேலை இல்லை தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“