கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் அனுப்பும் சட்ட மசோதாக்களை நியமன ஆளுநர் கிடப்பில் போடுவது மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சி மூலம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு: குடிநீர் பிரச்னை பற்றி பெண்கள் முறையிட்ட போது சலசலப்பு
அதில், ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் சட்டமன்றத் தீர்மானம், இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே, உச்ச நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியா முழுமைக்குமானது தான் தமிழ்நாட்டின் குரல். சமூக நீதிக்கு தமிழ்நாடு தான் தலைநகர். மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடு தான் தலைநகர். அந்த அடிப்படையில் தான் இதுமாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களோட பிரதிநிதிகள் சேர்ந்து அனுப்புகிற சட்டமசோதாக்களை ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது. அதனால் தான் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக என்னுடைய குரலுக்கு வலு சேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி. மற்ற மாநில முதலமைச்சர்களும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil