தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார். இதையடுத்து சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ள பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். என்னோடு தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: கிளாம்பாக்கம் ஜூனில் திறப்பு இல்லையா? அ.தி.மு.க அரசு குளறுபடி காரணம்: சேகர்பாபு பாய்ச்சல்
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய பயணம் மேற்கொள்ளப்படுகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதோடு, முதலீட்டாளர்களை நேரிலும் சந்தித்து பேசவிருக்கிறேன். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு அழைப்பு விடுக்கவே இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்திக்க உள்ளோம்.
துபாய் சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 15,100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 6 நிறுவனங்களும் பணிகளை தொடங்கிவிட்டன. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil