மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, ரூ 5000-ல் இருந்து ரூ 8000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,
1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்; கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது. மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலம் தமிழ்நாடு உள்ளது. மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம். மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை தற்போது உயர்த்தப்பட்டு இனி ரூ 8,000 ரூபாயாக வழங்கப்படும். 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும். தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிக்கப்படும். விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும்.
நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு மீன்வள பல்கலை.யில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம். கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்படும்.
2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தில் 41 மீனவ சமுதாய மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.