CM Palaniswami and Telangana Governor Tamilisai meets: தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
பாஜகவின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக பொறுப்பேற்றபோது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் பதவியில் பொறுப்பேற்ற தமிழிசைக்கு வாழ்த்து கூறினேன். தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இடைத் தேர்தல் பற்றி பேசிய முதலவர் பழனிசாமி, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். மக்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளது என்று கூறினார்.
மேகதாது அணை விவகாரம் பற்றி பேசிய முதல்வர் பழனிசாமி, மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணைக்கட்டும் முடிவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து சாதியினருக்கும் உரிய சட்டப் பாதுகாப்புடன் இட ஒதுக்கீடு ஏற்கனவே அமலில் உள்ளது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.