Advertisment

தேவர் ஜெயந்தி: பசும்பொன்னில் ஸ்டாலின்- தலைவர்கள் அஞ்சலி

Tamilnadu news Update : பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (அக்டோபர் 28) தொடங்கியது

author-image
WebDesk
Oct 30, 2021 14:32 IST
தேவர் ஜெயந்தி: பசும்பொன்னில் ஸ்டாலின்- தலைவர்கள் அஞ்சலி

Tamilnadu Daver Jayanthi Update : இந்திய விடுதலை போராட்ட வீரரும், அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவாரின் பிறந்த நாளான அக்டோபர் 30-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 28-ல்தொடங்கி 30-ந் தேதி வரை தென் தமிழகத்தில் நடைபெறும் இந்த விழாவில், அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (அக்டோபர் 28) தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கிய இந்த விழா, இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது. தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று, பசும்பொன்னில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதல்வர் வருகையை ஒட்டி மதுரை, பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு மலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு சென்ற முதல்வர், மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,

''நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர்  பசும்பொன் தேவர்  திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்! ''மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல" என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர்!

''பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் – கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்" என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்!

''தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்" என்று சொன்ன தத்துவஞானி!

'நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை!

''முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கிய தமிழ் ஆளுமை!

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி! என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  தேச விடுதலைக்காக பெரும் படை திரட்டிய தென்னாட்டு சிங்கம், தலைசிறந்த பேச்சாளர், பக்தி மான், தேசியம், தெய்வீகம், வீரம், விவேகம், உண்மை, உறுதி இதனையே தனது கொள்கையாக கொண்டிருந்த தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிவு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தேவரின் புகைப்படத்தில், தன் வாழ்நாளெல்லாம் சாதி, மதமற்ற சமூகத்தை இம்மண்ணில் நிலைநிறுத்த அரும்பாடுபட்டு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தேவர் திருமகனாரை போற்றி வணங்குகிறேன் என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பளர் சீமான் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பதிவில், பகிர்ந்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment