தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே புதிதாக ஆட்சி அமைத்த திமுக கொரோனா தொற்றை வெற்றிகரைமான கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு தரமான ஆடை மற்றும் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இலங்கை தமிழர்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. கடந்த 1997-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி காட்டினார். இதனால் அவர்கள் ஓரளவிற்கு தன்னிறைவு பெற்றார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களை மீண்டும் நாம் தொடங்கி இருக்கிறோம்.
அவர்கள் அனாதைகள் அல்ல அகதிகள் அல்ல அவர்களுக்காக திமுக இருக்கிறது. அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் அனைத்து கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
மேலும் இதுவரை வழங்கி வந்த மாதாந்தியர பண கொடை உயர்த்தி தரப்படும். இந்த திட்டத்திற்காக ரூ 12.41 கோடி நிதி ஒதுக்கப்படும். துணிமணிகள் வழங்குவதற்காக ரூ 3 கோடியும், இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்க ரூ 8.66 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக 3510 புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்படுகிறது.
முகாமில் உள்ள தமிழர்களுக்கு கோ-ஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil