கலைஞர் நூற்றாண்டு விழா நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்று தவளை போல் பேசியுள்ளார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் கலைஞர் நூறாண்டு விழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக, நேற்று (ஆகஸ்ட் 18) கலைஞர் உருவம் பொறித்த ரூ100 நாணயம் வெளியிடப்பட்டது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர், ராஜநாத் சிங் விழாவில் கலந்துகொண்டு நாணயத்தை வெளிட்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்த விழா குறித்து பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக இடையே உள்ள ரகசிய கூட்டணியை வெளிப்படுத்தி உள்ளது, இதற்கு முன்பு திமுகவினரின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்கு ராகுல்காந்தி ஏன் அழைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நாணய வெளியீட்டு விழா தி.மு.க. நிகழ்ச்சி அல்ல; மத்திய அரசின் நிகழ்ச்சி, பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி, பதவி சுகம் அனுபவிக்க நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வது தி.மு.கவின் வாடிக்கை. நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசு நடத்திய விழா. எங்கும் மத்திய அரசின் பெயர் இல்லை. சோனியா, ராகுல், மற்றும் கார்கே ஆகியோரில் யாரையாவது விழாவுக்கு அழைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்பவர் வடிகட்டிய பொய் மூட்டை, சென்னை சென்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டினோம். எம்.ஜி.ஆருக்கு ரூ100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கை ஏற்றுதான் மத்திய அரசு சார்பில் நாணயம் வெளியிடப்பட்டது. விழாவை நாங்களே (தலைமையிலான தமிழ்நாடு அரசு) நடத்தினோம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இது குறித்து தனது விமர்சத்தை முன் வைத்துள்ளார்., கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமி கிணற்று தவளை போல் பேசுகிறார். நாணய வெளியீட்டு விழா குறித்து அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த விரும்பினால் அனுமதி தரப்படும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“