இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைக்க மரக்காணம் செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
கொரோனா காரணமாக உருவான பள்ளி மாணர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள திட்டம் இல்லம் தேடி கல்வி. இத்திட்டத்திற்காக ரூ 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாத காலத்திற்கு தினமும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்டவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் நடத்துவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/stalin-school.jpg)
இந்த நிலையில் இந்த திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில் கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியை பார்த்துவிட்டு தனது கான்வாயை நிறுத்துமாறு கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி பள்ளியின் உள்ளே சென்ற முதல்வர், நேராக வகுப்புகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/stalin-school2.jpg)
அப்போது மாணவர்களிடம் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருகின்றனவா, பஸ் பாஸில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என கேட்டுள்ளார். பின்னர் கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார். இதையடுத்து ஆசிரியர், ஆசிரியைகளிடம் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டதோடு, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனரா எனவும் கேட்டறிந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/stalin-school3.jpg)
மேலும் அங்குள்ள சத்துணவு கூடத்திற்குச் சென்று, அங்கிருந்த பொருள்கள் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்றும் சமையலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களை நன்கு படித்து பெரிய ஆளாக வேண்டும் என அறிவுரை வழங்கிய அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இப்படி முன்னறிவிப்பு ஏதுவுமில்லாமல் திடீரென முதல்வர் பள்ளியில் ஆய்வு நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இதேபோல், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு இரவு நேரத்தில் திடீர் ஆய்வுக்கு சென்றார். அங்கு எஸ்ஐ நாற்காலியில் அமர்ந்து கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதே போல் குற்றாலம் அருகே ஒரு அரசு பள்ளிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அண்மையில் சில தினங்களுக்கு முன்னர் ஈசிஆர் சாலையில் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil