/indian-express-tamil/media/media_files/2025/05/15/RUlpz9jrnWTmq36ayJKv.jpg)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியிருந்தார். இதனையடுத்து தற்போது தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளிகரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.
‘இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?’ என்றும், ‘டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் செல்கிறார்’ என்றும், ‘வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்’ என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நிதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக, மாநிலத்தின் முதல்வராக நானும் அதில் பங்கேற்கத் தீர்மானித்தேன். அதற்கான அறிவிப்பும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, ஊடகங்களில் வெளியானது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், அனைவரையும் அவர் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினர். மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதைத் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டம் அதற்கேற்ற வகையில் இருந்ததையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
2045-ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தேன். அதாவது, தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10% அளவிற்கு உள்ளது. அது 15% அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். குறிப்பாக, திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது. அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாகத் திமுக இருப்பதை முன்னாள் முதல்வர் அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது.
நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம். எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள்.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்ற உறுதியை மக்கள் எடுத்துள்ளனர். அவர்களுக்கான பணியை மேற்கொள்வதே நம் கடமை. தேர்தல் களமும் மக்கள் பணியும் இணைந்துள்ள நிலையில், உடன்பிறப்புகளான உங்களை ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். உடன்பிறப்புகளை எதிர்நோக்கி மதுரை பொதுக்குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். நீங்களும்தானே?” என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.