சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த அதிர்ச்சியில் மாணவனின் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுனர் இதயம் கரையாது என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஷ்வரன். 19 வயதான இவர் மருத்துவம் படிக்கும் ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். ஆனால் இந்த 2 தேர்வுகளிலும் ஜெகதீஷ்வரன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜெகதீஷனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே மகனை இழந்த சோகத்தில் இருந்த தந்தை செல்வசேகர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கே சென்ற போலீசார் செல்வசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இருக்கும் தமிழக ஆளுனர் மீது மக்களின் கவனம் சென்றுள்ளது. இது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின்,
தற்கொலை செய்துகொண்ட மாணவனின் குடும்பத்திற்கு எப்படி ஆளுதல் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நீட் என்னும் பலி பீடத்தில் பலியானவர்களின் பட்டியலில் ஜெகதீஷனும் சேர்ந்துவிட்டது மிகவும் கொடூரமான நிகழ்வு. 2 முறை நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்து அனுப்பியும் ஆளுனர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
ஜெகதீஷ்வரன் போன்ற இன்னும் எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுனர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை. மாணவன் ஜெகதீஷன் அவரது தந்தை செல்வசேகர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களது மரணமே நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil