/indian-express-tamil/media/media_files/2025/04/30/lOnqG1PMWddibDYH21DH.jpg)
MK Stalin
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2019 ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டைனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை குற்றசெயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும். இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் விதமாக உரிய சட்ட திருத்தத்தை சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக் குமு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/KrStju8Z9B
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 14, 2025
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.