இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள், உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்கில் பதிவாகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே பாதிப்பு 25,000க்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மே 10 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலையே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, இன்று காலை முதல்வர் ஊரடங்கு குறித்த அறிவிப்பை அறிவித்தார்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்திற்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழகத்தின் கொரோனா நிலைமையைக் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரதமர் ஏற்கனவே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச முதல்வர்களுடன் கொரோனா குறித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil