/tamil-ie/media/media_files/uploads/2021/09/Sekhar-Babu-1200.jpg)
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதோடு, அவரை செயல்பாபு என அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் புகழாராம் சூட்டியுள்ளார்.
ஒருகால திட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன்.
‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான்.
கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும். அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும். அனைத்து துறைகளையும் முந்திக்கொண்டு சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார்.” என பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.