2 நாட்கள் சுற்றுப்பயணமாக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரோடு ஷோ சென்றவாறு மக்களை சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாளான இன்று, விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் தொழிற்சாலை பெற்றுள்ள சான்றிதழ்களை பரிசோதனை செய்தார்.
மேலும் பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயண பொருட்கள் வைப்பறை, பட்டாசு தயாரிக்கப்படும் இடங்கள், தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்து சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தை ஆய்வு செய்தார். இங்கு, குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளிடம் உரையாடினார்
பள்ளி மற்றும் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், மற்றும் குறைகளை அவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், காப்பகத்தில் வழங்கப்படும் உணவு மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வந்த ஸ்டாலின், அங்கிருந்து, ராமமூர்த்தி சாலை வரை வாகன பேரணி மேற்கொண்டார். அப்போது தன்னை பார்க்க வந்து சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
இந்த பேரணியின் போது, தி.மு.க. தொண்டர்கள், கொடுத்த சால்வை, மற்றும் பரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பேரணியின்போது அங்கு நின்றிருந்த குழந்தைகளை பார்த்து வாகனத்தை நிறுத்தி அவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து அவர்களுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்த ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“