பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தவர் தான் ஆம்ஸ்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த இருந்த இவர், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த வந்த நிலையில், நேற்று (ஜூலை 5) இரு சக்கர வாகனத்தில் வந்த பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ராங் கொலை வழக்கில், 8 பேர் நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளனர்.
இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“